நிழல் கிரகங்களான ராகுவிற்கும் கேதுவிற்கு இடையில் மற்ற ஏழு கிரகங்கள் அனைத்தும் அமர்ந்திருக்கும் அல்லது சிக்கியிருக்கும் கால நிலையே காலசர்ப்ப தோஷம் எனப்படும்.
சிறிது விளக்கமாக பார்த்தோமென்றால் ராகுவிற்கு 7-ஆம் இடத்திலே கேதுவானது 180° இடைவெளியில் அமர்ந்திருக்கும். மற்ற கிரகங்கள் அனைத்தும் நேர் திசையில் அல்லது கடிகார சுற்றின் திசையில் (வலமிருந்து இடமாக) சுற்றி வரும்பொழுது ராகு கேது கிரகங்கள் மட்டும் அதற்கு எதிர் திசையில் (இடமிருந்து வலமாக) சுற்றி வரும்.
ராகு கேது இரண்டும் உண்மையில் கிரகங்கள் அல்ல. இவைகளை நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அதாவது வான்வெளி மண்டலத்திலே சூரியனின் சுற்றுப்பாதையும் சந்திரனின் சுற்றுப்பாதையும் ஒன்றுக்கொன்று சந்திக்கும் போது இரண்டு வெட்டும் புள்ளிகள் (சந்திர முனைகள்) ஏற்படுகின்றன. இதில் வடமுனையில் உருவான புள்ளியை ராகு என்றும் தென்முனையில் உருவான புள்ளியை கேது என்றும் சொல்கிறோம்.
இதில் ராகுவை சர்ப்பத்தின் தலைப்பகுதியாகவும் கேதுவை வால்பகுதியாகவும் சோதிடத்திலே ஒப்பிடப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட காலத்திலே லக்னம் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் ராகு கேதுவிற்கு இடையில் வரும் பொழுது அல்லது சிக்கியிருக்கும் வேளையில் பிறக்கும் குழந்தைகளுக்கு காலசர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.
இதில் லக்னமோ வேறு எதாவது ஒரு கிரகமோ வெளியில் இருந்தாலும் காலசர்ப்ப தோஷம் கிடையாது.
காலசர்ப்ப தோஷம் ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் சில ..
- DNA -வில் உள்ள மரபணுக்கள் மூலமாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறையினருக்கு வருகிறது. உதாரணமாக முற்பிறவியில் நீங்களோ அல்லது உங்களுடைய முன்னோர்களோ தெய்வமாக வணங்க வேண்டிய சர்பத்தையோ அல்லது விலங்குகளையோ துன்புறுத்தியிருந்தால் அல்லது கொன்றிருந்தால் இந்த தோஷம் ஏற்படும் .
- உங்கள் சுயநலத்திற்காகவோ அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காகவோபுற்றுக்கண்ணை நீங்கள் இடித்திருந்தால் இந்த தோஷம் ஏற்படும்.
- முற்பிறவியில் நாகதேவதைகளின் கோபத்திற்கு நீங்கள் ஆளாயிருந்தால் இந்த தோஷம் உருவாகும்.
காலசர்ப்ப தோஷத்தினால் பாதிக்கப்படும் நபருக்கு ஏற்படும் அறிகுறிகள் அல்லது பாதிப்புகள்.
- அந்தந்த வயதிலோ அல்லது நேரத்திலோ நடக்கவேண்டிய காரியங்கள் நிகழ்வுகள் நடக்காமலிருப்பது.
- திருமண தாமதம் ஏற்படுவது.
- இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்க்கு வேறு நல்ல யோகங்கள் அமையாமலிருந்தால் அவர்களுக்கு திருமணம் நடக்காது.
- அப்படியே திருமணம் நடந்தாலும் கருத்து வேறுபாடு காரணமாக தனியாகவோ அல்லது விவாகரத்து பெற்றோ வாழ்க்கைத்துணையிடமிருந்து பிரிந்து வாழ்வது.
- சந்ததிகள் உருவாவதில் சிக்கல் அல்லது கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படும்.
- சந்ததிகள் உருவானாலும் இவர்களை மதிக்கமாட்டார்கள்.
- குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பிரச்சினை ஏற்படுவது.
- குடும்ப உறுப்பினருக்கு அடிக்கடி விபத்துக்கள் உண்டாவது.
- சிறு விருப்பத்தை நிறைவேற்றக்கூட கடுமையாக உழைப்பது.
- தீயபழக்கவழக்கத்திற்கு ஆளாகி சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்வது.
- சிறைவாசம் அனுபவிப்பது.
- மரபுவழி நோய்கள் ஏற்படுவது.
- தீராத நோயினால் ஆயுள்காலம் குறைவது.
- திடீரென செல்வத்தையும் பொருளையும் இழப்பது.
- அரசியலில் திடீர் வீழ்ச்சி.
- பொருளாதார தடைகள்.
- அடிக்கடி தொழிலையே அல்லது வேலையையோ இழந்து அதிருப்தியான வாழ்க்கை வாழ்வது.
- பய உணர்வு மற்றும் பாதுகாப்பில்லாமலிருப்பதுபோல் உணர்வது.
- சதா எதையோ சிந்தித்துக்கொண்டிருப்பது.
- யாராவது தன்னை தொட்டால் விறுக்கென்று பயப்படுவது.
- எப்பொழுதும் ஒருவரையே சார்ந்திருப்பது.
- உயரமான இடங்களில் இருக்கும் போது பேரச்சம் ஏற்படுவது.
- பாம்புகள் அடிக்கடி கனவில் வந்து தோன்றுவது.
- மூதாதையர்கள் கனவில் தொடர்ந்து வந்துகொண்டேயிருப்பது.
- கனவில் சிலர் தாக்கவோ அல்லது கொலை செய்யவோ வருவதுபோல் தோன்றுவது.
- கனவில் தண்ணீர் நிரம்பிய இடங்கள் அடிக்கடி வந்து போவது.
- ஜாதகத்தில் இரண்டும் அதற்குமேற்பட்ட கிரகங்கள் உச்சம் பெற்றிருந்தாலும் காலசர்ப்ப தோஷகாலம் முடியும்வரை பலன் கிடைக்காது.
காலசர்ப்ப தோஷத்தை கிரகங்களின் நிலையைப் பொறுத்து 12 வகைகளாக பிரிக்கலாம்.
லக்னத்தில் ராகுவும் 7-ஆம் வீட்டில் கேதுவும் அமர்ந்து இவற்றிற்கிடையில் மற்ற அனைத்து கிரகங்களும் அடைபட்டிருந்தால் இது அனந்தகால சர்ப்பதோஷம் எனப்படும்.
27 வயதுவரை இருக்கும் இந்த தோஷம் இளமைக்காலத்தை சிரமமானதாகவும் கடினமானதாகவும் ஏற்படுத்தும்.
- சிலருக்கு திருமணத்தடை இருக்கும்.
- திருமணமாகியிருந்தால் மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்தோ அல்லது அவர்களை இழந்தோ வாழ நேரிடும்.
- குடும்பத்தில் தீராத நோய்கள், சிக்கல்கள் ஏற்படும்.
- சிலருக்கு அரசு ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் சிக்கல்கள் ஏற்பட்டு திடீரென பெயரும், புகழும் வீழ்ச்சியடையும்.
இந்தக்காலகட்டத்தில் வீரம், தைரியம், தன்னம்பிக்கை மற்றும் பெருந்தன்மையுடன் இருப்பர் என்பது சிறிது சிறப்பு.
லக்னத்திலிருந்து 2-ஆம் வீட்டில் ராகுவும் 8-ஆம் கேதுவும் அமர்ந்து இவற்றிற்கிடையில் மற்ற அனைத்து கிரகங்களும் அடைபட்டு இருந்தால் இது குளிகைக்கால சர்ப்ப தோஷம் எனப்படும்.
33 வயதுவரை இந்த தோஷம் இருக்கும். இந்தக்காலகட்டத்தில்
- பொருளாதார பின்னடைவு ஏற்படும்.
- பூர்வீக சொத்து நிலைக்காது. வறுமை ஏற்படும்.
- நிறைய பிரயாணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.
- விபத்துக்கள் ஏற்படும்.
- உடம்பில் ஏதாவது பிரச்சினைகள் வந்துகொண்டேயிருக்கும்.
- குறிப்பாக மர்ம உறுப்புகளில் நோய்கள் வரும்.
- குடும்பத்திலும் வெளியிலும் நல்ல புரிதல்கள் இல்லாமையால் முரண்பாடுகளாகவும் போராட்டங்களாகவும் இருக்கும்.
- பில்லி சூனியம் போன்ற விஷயங்களில் தவறான நோக்கத்துடன் ஆர்வம் காட்டுவர்.
ராகு இருக்கும் வீட்டின் அதிபதி பலம் பெற்றிருந்தால் வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும் என்பது சிறப்பு பலன்.
லக்னத்திலிருந்து 3-ஆம் வீட்டில் ராகுவும் 9-ஆம் கேதுவும் அமர்ந்து இவற்றிற்கிடையில் மற்ற அனைத்து கிரகங்களும் அடைபட்டு இருந்தால் இது வாசுகி காலசர்ப்ப தோஷம் எனப்படும்.
36 வயதுவரை இந்த தோஷம் இருக்கும். வாசுகி காலசர்ப்ப தோஷம் செயல்படும் வேளையில் ஒருவருக்கு..
- இளைய சகோதர சகோதரிகளுடனும், பெற்றோர்களுடனும் விரோதமிருக்கும்.
- எந்த வேலையையும் துணிந்து செய்ய முன்வரமாட்டார்.
- செய்கிற வேளையிலும், தொழிலும் தொடர் பிரச்சினைகள் இருக்கும்.
- சொத்துக்களை இழப்பர்.
- சட்டத்துக்கு புறம்பான காரியங்களில் ஈடுபடுவதினால் அவதூறு ஏற்படும்.
- பக்கவாத நோய் ஏற்படும்.
9 ஆம் வீட்டையோ அல்லது அதன் அதிபதியையோ தீயகிரகங்கள்பார்க்கவில்லையென்றால் நன்மை ஏற்படும்.
லக்னத்திலிருந்து 4-ஆம் வீட்டில் ராகுவும் 10-ஆம் வீட்டில் கேதுவும் அமர்ந்து இவற்றிற்கிடையில் மற்ற அனைத்து கிரகங்களும் அடைபட்டிருந்தால் இது சங்கல்ப கால சர்ப்பதோஷம்
எனப்படும்.
42 வயதுவரை இந்த தோஷம் இருக்கும். இந்த தோஷம் இருப்போருக்கு..
- குடும்பவாழ்க்கையில் ஏற்படும் தொடர் பிரச்சினைகளால் மன அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும்.
- பெற்றோர் உடல்நிலை பாதிக்கும்.
- தாயாரின் அன்பு கிடைக்காமல் அவரோடு கருத்துவேறுபாடுகள் ஏற்படும்.
- அந்நிய இடத்தில தந்தைக்கு மரணம் சம்பவிக்கலாம்.
- தொழில், வேலை, சொத்து இவற்றினால் இழப்பு ஏற்படும்.
- வீடு, வாகனங்களினால் பிரச்சினை உருவாகும்.
- எதிலும் மகிழ்ச்சியோ, மனதிருப்தியோ இல்லாமல் இருப்பர்.
- கருத்தரிப்பதில் பிரச்சினை ஏற்படும்.
சூரியனும், 10 ஆம் வீடும் பலமாக இருந்து சுபகிரகங்கள் பார்வை பட்டால் நன்மை ஏற்படும்.
லக்னத்திலிருந்து 5ஆம் வீட்டில் ராகுவும் 11-ஆம் வீட்டில் கேதுவும் அமர்ந்து இவற்றிற்கிடையில் மற்ற அனைத்து கிரகங்களும் அடைபட்டிருந்தால் இது பத்மகால சர்ப்பதோஷம் எனப்படும்.
48 வயதுவரை இந்த தோஷம் இருக்கும். இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டோருக்கு..
- குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்பட்டு கணவன்-மனைவி உறவை பாதிக்கும்.
- குழந்தைகள் இழப்பு ஏற்படும்.
- புத்திர தோஷத்தை தருவதால் இது மிகவும் பாதகமான சர்ப்ப தோஷமாகும்.
- வேறு திருமணம் செய்ததினால் பிறந்த குழந்தைகளினால் இவரது வாழ்க்கை அழியும்.
- பழகிய நண்பர்கள் உட்பட பலர் துரோகிகளாக மாறுவர்.
- காதல் தோல்வி, படிப்பில் தடை ஏற்படும்.
- வழக்குகள் சம்பந்தமான பிரச்சினை உருவாகும்.
- இத்துடன் சந்திரனும் கெட்டால் ஆவிகள் தொல்லை தரும்.
லக்னத்திலிருந்து 6ஆம் வீட்டில் ராகுவும் 12-ஆம் வீட்டில் கேதுவும் அமர்ந்து இவற்றிற்கிடையில் மற்ற அனைத்து கிரகங்களும் அடைபட்டிருந்தால் இது மஹாபாத காலசர்ப்ப தோஷம் எனப்படும்.
54 வயதுவரை இந்த தோஷம் இருக்கும். இந்த தோஷம் உள்ளோருக்கு..
- இளமைக்காலத்தை விட பிற்காலத்தில் சிறந்த பலன் உண்டாகும்.
- புகழ், அந்தஸ்து, அதிகாரம், பதவி ஆகியவற்றினால் பெரும்புகழ் அடையும் அதேவேளையில் அதள பாதாளத்திற்கு இழுத்தும் செல்லப்படுவர்.
- எதிரிகளால் பிரச்சினை, சிறைவாசம், வீண் விரயங்கள், அரச தண்டனைகள் போன்ற பலன்கள் கிடைத்க்கும்.
- சிலர் கௌரவத்திற்காக கோயில் திருப்பணி, அறக்கட்டளை நிறுவி தொண்டுகள் செய்வார்கள்.
- 54 வயதுக்கு பின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- ரகசிய எதிரிகள், நாள்பட்ட நோய் போன்றவற்றால் தொல்லையும், திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும்.
- இந்த தோஷம் முக்கியமாக அரசியல்வாதிகளுக்கு பொருந்தும்.
- தாய்மாமன் மூலம் பல கஷ்டங்களை அனுபவித்து சொத்துக்கள் இழக்க நேரிடும்.
6 ஆம் அதிபதியைப் பொறுத்து நோய் குணமாதலும், எதிரிகளை வெற்றிகொள்ளுதலும் நடக்கும்.
7 ல் ராகு லக்னத்தில் கேது அமர்ந்து இவற்றிற்கிடையில் மற்ற அனைத்து கிரகங்களும் அடைபட்டிருந்தால் இது கால மிருதுயு சர்ப்பதோஷம் எனப்படும்.
27 வயதுவரை இந்த தோஷம் இருக்கும். இந்த தோஷம் உள்ளோர்..
- 27 வயதுக்கு பின்புதான் திருமணம் செய்யவேண்டும்.
- அதற்குமுன் திருமணம் செய்தால் நிலைக்காது.
- அப்படியும் செய்தால் விவாகரத்து ஏற்படும்.
- சிலர் இரண்டாவது திருமணம் செய்யாமல் தெய்வப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வர்.
- கூட்டு தொழிலில் பிரச்சினை உருவாகும்.
- மது, மாது, சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு தனது செல்வத்தையெல்லாம் இழப்பர்.
லக்னத்திலிருந்து 8-ஆம் வீட்டில் ராகுவும் 2-ஆம் வீட்டில் கேதுவும் அமர்ந்து இவற்றிற்கிடையில் மற்ற அனைத்து கிரகங்களும் அடைபட்டிருந்தால் இது கார்க்கோடாக கால சர்ப்பதோஷம் எனப்படும்.
33 வயதுவரை இந்த தோஷம் இருக்கும். கார்க்கோடாக கால சர்ப்பதோஷம் ஒரு கொடிய தோஷமாகும். இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவருக்கு..
- குடிப்பழக்கம், புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் இருப்பதுடன் பேசும்போது தகாத வார்த்தைகளை பயன்படுத்துவர்.
- குறுகிய மனநிலையில் இருப்பதால் எதிரிகள் அதிகமாக இருப்பார்கள்.
- பூர்வீக சொத்துக்களால் ஆபத்து இருக்கும்.
- தந்தையின் சொத்துக்களை அடைய ஆசைப்பட்டு அதை அடைய பல தவறுகள் புரிவர்.
- தந்தையின் பணத்திற்காக அவருக்கு ஆபத்தையும் விளைவிக்க துணிவர்.
- அதனால் இவருக்கு தந்தைவழி சொத்துக்கள் கிடைப்பது கடினம்.
- தனக்குத்தானே அழிவையும் ஏற்படுத்திக்கொள்ள முயல்வர்.
- உடல்நலக்குறைவு மற்றும் மனஅமைதியின்மை இருக்கும்.
- திடீர் விபத்துக்கள் ஏற்படும்.
- மற்றவர்களுடைய இன்சூரன்ஸ் பணம் இவருக்கு கிடைக்கும்.
கல்வியில் சிறந்து விளங்குவர். பேச்சு மற்றும் செயல்களினால் மற்றவர்களை கவருவர் என்பது சிறப்பு பலன்.
லக்னத்திலிருந்து 9-ஆம் வீட்டில் ராகுவும் 3-ஆம் வீட்டில் கேதுவும் அமர்ந்து இவற்றிற்கிடையில் மற்ற அனைத்து கிரகங்களும் அடைபட்டிருந்தால் இது சங்ககுட காலசர்ப்ப தோஷம் எனப்படும்.
இந்த தோஷம் 36 வயதுவரை இருக்கும். இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டோருக்கு..
- வாழ்க்கையானது கடுமையான மேடுபள்ளங்கள் நிறைந்ததாக இருக்கும்.
- சிறிது காலம் புகழோடிரிந்து பின்பு தாழ்ந்துவிடுவர். இன்னும் சிலபேர் சிறிது நாட்கள் பிரபலமாகயிருபார்கள் பின்பு காணாமல் போய்விடுவார்கள்.
- தந்தை மற்றும் பிள்ளைகளின் உறவுகளில் சந்தோசம் கிடைக்காது.
- பொய் பேசுவதாலும் முன்கோபத்தாலும் சமுதாயத்தில் இவருக்கு கெட்டபெயர் ஏற்படும்.
லக்னத்திலிருந்து 10-ஆம் வீட்டில் ராகுவும் 4-ஆம் வீட்டில் கேதுவும் அமர்ந்து இவற்றிற்கிடையில் மற்ற அனைத்து கிரகங்களும் அடைபட்டிருந்தால் இது கடக காலசர்ப்ப தோஷம் எனப்படும்.
47 வயதுவரை இந்த தோசமிருக்கும். இந்த தோஷத்தால் ..
- தொழில் தடை ஏற்படும், பணிபுரியும் அலுவலகங்களில் அவமரியாதை உண்டாகும்.
- தன்னுடன் பணிபுரியும் மூத்த பணியாளர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு அவர்களிடமிருந்து விலகியிருக்க நேரிடும்.
- 10 ஆம் வீட்டில் ராகு அமர்வதால் வெளிச்சம் இல்லாத இடத்தில தொழில் செய்யும்படி அமையும். உதாரணம் எக்ஸ்ரே மற்றும் புகைப்படம் எடுக்கும் தொழில்கள்.
- அரசாங்கத்திற்கெதிராக செயல்பட்டு தண்டனைக்குள்ளாக நேரிடும்.
- 47 வயதுக்குப்பின் மிகச் சிறந்த தொழிலதிபர் ஆவர்.
- அதுவே கன்னி மற்றும் சிம்ம லக்கினக்காரர்களாக இருந்தால் அரசாங்கத்தில் உயர்பதவிகள் கிட்டும்.
- ராகு நின்ற ராசி அதிபதி கெட்டால் சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்வர்.
லக்னத்திலிருந்து 11-ஆம் வீட்டில் ராகுவும் 5-ஆம் வீட்டில் கேதுவும் அமர்ந்து இவற்றிற்கிடையில் மற்ற அனைத்து கிரகங்களும் அடைபட்டிருந்தால் இது விஸ்தார கால சர்ப்பதோஷம் எனப்படும்.
48 வயதுவரையிருக்கும் இந்த தோஷத்தின் பாதிப்பு என்னவெனில்..
- ஒரேஇடத்திலில்லாமல் வேலை நிமித்தமாக அடிக்கடி செய்யும் பிரயாணத்தால் உடல்நலம் கெடும்.
- வெளிநாட்டில் வாசிக்கவேண்டி வரும்.
- குழந்தைகள் மூலமாக வருத்தங்கள் ஏற்படும்.
- முதலீடுகள், நிதிநிர்வாகம், பங்குச்சந்தை போன்றவை பயனளிக்காது.
- இந்த தோஷகாலத்தில் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளிலிருந்து விலகியிருப்பது நல்லது.
லக்னத்திலிருந்து 12-ஆம் வீட்டில் ராகுவும் 6-ஆம் வீட்டில் கேதுவும் அமர்ந்து இவற்றிற்கிடையில் மற்ற அனைத்து கிரகங்களும் அடைபட்டிருந்தால் இது சேஷ காலசர்ப்ப தோஷம் எனப்படும்.
54 வயதுவரை இந்த தோஷம் இருக்கும். இந்த தோஷகாலத்தில் ..
- அதிக எதிரிகளை உடையவர்களாக இருப்பர்.
- எதிரிகள் இவருக்கு பின் நின்று சதிகள் செய்வார்கள்.
- திடீர் செலவுகள் வந்துகொண்டேயிருக்கும்.
- செலவுகளும் விரயங்களும் உண்டாகி பணத்தட்டுப்பாடு ஏற்படும்.
- பிறந்த ஊரைவிட்டு நீண்டதூரம் தள்ளியிருப்பர்.
- இரவில் தூக்கம் வரத்து.
- அசுபர்கள் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- கல்வியில் சிறந்து விளங்குவதால் வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
- வயோதிகத்தில் கிடைக்கும் பேரும் புகழினால் இறந்த பின்பும் அது நிலைத்து நிற்கும்.
காலசர்ப்ப தோஷத்தின் 12 பிரிவுகளை இதுவரை சற்று விரிவாக நாம் பார்த்தோம். காலசர்ப்ப தோஷத்தை பற்றிய முரண்பாடுகளையும் சிறிதளவேனும் பார்க்கவேண்டியிருக்கிறது.
கால சர்ப்ப தோஷம் அல்லது கால சர்ப்ப யோகம் எனும் சொல்லாடல் சோதிட மூல நூல்களில் இல்லை என்று பல சோதிட ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கால சர்ப்ப தோஷம்/யோகமானது மிகக்குறுகிய காலகட்டத்திலே பிரபலமாகியிருப்பதாக கூறுகிறார்கள்.
இதைப்பற்றி பிரபல சோதிட ஆசான் திரு. கே.என். ராவ் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்.
"சோதிடத்தில் கால சர்ப்ப தோஷம் என்பது ஒரு மிகப்பெரிய மோசடியாகும். முதலாவதாக கால சர்ப்ப தோஷம் என்பது எங்கிருந்து துவங்கியது என்பது யாருக்கும் தெரியாது. இதற்கான ஆதாரங்கள் சோதிட மூல புத்தகங்களான பிருகு பராசுர ஹோரா சாஸ்திரம், பிருஹத் ஜாதகம் மற்றும் சாராவளி போன்றவற்றில் காணப்படவில்லை. இரண்டாவது முக்கியமாக ஜாதகத்தை முழுமையாக ஆய்வு செய்து பார்க்கவேண்டும். நூற்றுக்கணக்கான நல்ல மற்றும் தீய யோகங்கள் ஒவ்வொரு ஜாதகத்திலும் இருக்கும். இவையாவையும் ஒருங்கிணைத்துத்தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஒரு ராஜயோகம் ஒருவரை ராஜாவாக்கவும் முடியாது. அதுபோல் ஒரு கால சர்ப்ப தோசமானது மரணத்திற்கு ஒப்பான நிகழ்வையும் தரமுடியாது"என்கிறார்.
இதைப்போலவே சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஜோதிட பிதாமகன் திரு. பி.வி. ராமன் கூறுவதென்னவென்றால்..
"கால சர்ப்ப யோகமானது தனக்கென பிரகாசமான நிழலை வைத்திருக்கிறது. இது மனஅமைதியற்று இருக்கும் ஒருவரை தொழிலதிபராகவோ, உழைப்பாளியாகவோ அல்லது தனது சொந்த திறமையை அறிந்தவராகவோ மாற்றுகிறது. மற்ற ராஜயோகங்கள் இருந்தபோதும் ஒருவரை அந்தந்த துறைகளில் மிக உயர்ந்த இடத்திற்கு வளரச்செய்கிறது".இன்னும் பல பெரிய சோதிடர்கள்
"கால சர்ப்ப தோசமானது ஒருவருடைய வாழ்நாளை பதிப்படையச்செய்வதுமட்டுமல்லாமல் அவருக்கு கிடைக்கவேண்டிய ராஜயோகங்களையும் சேர்த்து வளரவிடாமல் பாதிப்படைய செய்கிறது"என்கின்றனர். இதை மறுக்கும் சில சோதிட வல்லுநர்கள்
"ஒருவருக்கு விம்சோத்திரி தசை புத்தி மற்றும் கிரகங்களின் பலம் போன்றவற்றை பொறுத்துதான் நன்மையோ அல்லது தீமையோ நடக்கிறது. அது ஜாதகரின் அமைப்பு பொறுத்து எந்த வயதிலும் நடக்கலாம். இந்நிலையில் கால சர்ப்ப தோச ஜாதகருக்கு திடீரென்று 36 வயதுக்குமேல் எப்படி யோகம் கிடைக்கும் "என கேட்கின்றனர்.
இப்படியான பல முரண்பாடுகள் இருக்கும் நிலையில் சோதிடத்தில் புலமை பெற்ற அறிஞர்கள் கால சர்ப்ப தோஷம் / யோகத்தை நன்றாக ஆராய்ந்து ஒருமித்த சரியான தீர்வை எட்டி சமர்ப்பிக்க வேண்டும்.
நாகசர்ப தோஷ பரிகாரங்களுடன் கால சர்ப்ப தோஷபரிகாரங்களும் சேர்ந்து இத்துடன் தெய்வங்களும் புராண கதைகளும் உருவாக்கி மென்மேலும் ஜோதிடத்தில் சிக்கல்கள் வளர வழி வகுத்து விடப்பட்டிருக்கிறது. இது சோதிடத்தை நம்பும் மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
நெருப்பு இல்லாமல் புகையாது என்பது போல், இந்த அமைப்பு கொண்ட ஜாதகர்களுக்கு ஏற்படும் நன்மை தீமை ஒட்டியே சோதிடர்கள் கால சர்ப்ப தோஷம் / யோகம் என பெயரிட்டு அதை 12 வகைகளாக பிரித்து வைத்துள்ளனர் என்று நீங்கள் நம்பினால் .. இதே அமைப்பு தமது ஜாதகத்திலும் இருந்தால்.. அதை ஆராய்ந்து அதற்குத்தக்கபடி உங்களது வாழ்க்கையை புரிந்துகொண்டு சரியான வழியில் கொண்டுசெல்வதே விவேகமாகும்.
மிகவும் தெளிவான பதிவு -காலசர்ப்ப தோஷம்.அருமை. நன்றி.
ReplyDeleteஅருமை
ReplyDelete